வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கின்றது. இது தொடக்கத்தில் சாதாரணமாக குறுஞ்செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதே சமயத்தில் மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப்-பில் புதிய அம்சங்கள் குறித்த அறிவிப்பை மெட்டா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் புது அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் குழுவில் 512 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணையலாம் என்று மெட்டா நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதை தவிர “கம்யூனிட்டிஸ்” என்ற புதிய வசதியையும் மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை “கம்யூனிட்டிஸ்” கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் “என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்” மூலம் பாதுகாக்கப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார். இந்தப் புதிய அப்டேட் உலகளவில் விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.