தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூலித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்க்கரை கணியான்விளை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் விக்னேஷ் வீட்டில் இருந்தபோது இரண்டு வாலிபர்கள் வீட்டுக்கு சென்று நாங்கள் சிங்காரபாளையத்தில் இருக்கும் உடல் ஊனமுற்றோர் சமூக நலவாழ்வு தொண்டு நிறுவனத்தில் இருந்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊனமுற்றோரின் நலனுக்காக நன்கொடை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களது பேச்சில் சந்தேகமடைந்த விக்னேஷ் நன்கொடை புத்தகத்தில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது இரண்டு வாலிபர்களும் தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்பது உறுதியானது.
மேலும் நன்கொடை புத்தகமும் போலியானது என்பதை அறிந்த விக்னேஷ் இரண்டு பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திலீப் ஜகதாப் மற்றும் லட்சுமணன் என்பது தெரியவந்தது. இவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொண்டு நிறுவனத்தின் பெயரில் நன்கொடை வசூல் செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.