சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 8888 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டு, எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த 10ஆம் தேதி தற்காலிக தேர்ச்சி பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றது முறைகேடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் இட ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். தனி நீதிபதியின் இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அ. பி. சாஹி தலைமையிலான அமர்வு விசாரித்தபோது , தேர்வு நடைமுறைக்கு குறித்து விளக்கம் அளிப்பதற்கு அவகாசம் கேட்டும் அதை கருத்தில் கொள்ளாமல் தடை உத்தரவைப் பிறப்பித்ததை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.