சுப்ரமணியசாமி வீட்டிற்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பற்றி ஐகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி மக்களவை எம்பியாக இருந்தபோது அவருக்கு டெல்லியில் அரசு பங்களா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவரது பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு பங்களாவை மீண்டும் தனக்கு ஒதுக்கி தரக்கோரி சுப்ரமணியசாமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வழக்கு விசாரணையின் போது சுப்பிரமணிய சுவாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை எதிர்த்து சுப்ரமணியசுவாமி தனது குடியிருப்புக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த மனுவை நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரிக்கும் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், மனுதாரர் சுப்பிரமணிய சுவாமிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய அவர் வசிக்கும் தனியார் குடியிருப்பில் உள்ள வீட்டில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களா மத்திய அரசிடம் நவம்பர் 5ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என சுப்பிரமணிய சுவாமி தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுப்பிரமணிய சுவாமியின் மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.