அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு புறம் பொறுப்பாக ஆடிவந்த நிலையில், ஆலன் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன் பின் 6ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த பின் ஆலன் 18 பந்துகளில் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கான்வேயுடன் கேன் வில்லியம்சன் ஜோடிசேர்ந்தார். அதனைத்தொடர்ந்து 12ஆவது ஓவரில் கான்வே 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த பிலிப்ஸ் அதிரடியாக 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இருப்பினும் மறுமுனையில் கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் கைகோர்த்தனர்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், கேன் வில்லியம்சன் அரை சதம் கடந்தார். அதன்பின் கடைசியில் மெக்கர்தி வீசிய 18 வது ஓவரில் வில்லியம்சன் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி என விளாச அந்த ஓவரில் 21 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து 19ஆவது ஓவரில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. லிட்டில் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் வில்லியம்சன், மூன்றாவது பந்தில் ஜிம்மி நீசம், நான்காவது பந்தில் சான்ட்னர் என ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் (5 பவுண்டரி, 3 சிக்சர்) 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். லிட்டில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
பின் அடார் வீசிய கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது நியூசிலாந்து அணி. மிட்செல் 31 ரன்களுடனும், டிம் சவுதி 1 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். அயர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஸ்வா லிட்டில் 3 விக்கெட்டுகளும் டெலானி 2 மற்றும் அடார் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பால் ஸ்டெர்லிங் மற்றும் பால்பிர்னி இருவரும் அதிரடி தொடக்கம் கொடுத்தனர்.நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதன் பின் 9ஆவது ஓவரில் பால்பிர்னி 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து 10வது ஓவரில் ஸ்டெர்லிங் 37(27) ரன்களில் அவுட் ஆனார். அதன் பின் வந்த டக்கர் 13, டெக்டர் 2, டெலானி 10,ஜார்ஜ் டோக்ரெல் 23 என அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் அவுட் ஆனதால் இலக்கை சேஸ் செய்ய முடியவில்லை.
இறுதியில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி, சான்ட்னர், சொதி ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளுடன், ஒரு போட்டியில் மழையால் நிறுத்தப்பட்டு ஒரு புள்ளிகள் என மொத்தம் 7 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.
New Zealand register a comfortable victory against Ireland at the Adelaide Oval 👏#T20WorldCup | #IREvNZ | 📝 https://t.co/GxSSNsV9j5 pic.twitter.com/VgscLhbjYG
— ICC (@ICC) November 4, 2022