திருச்செந்தூர் அவதாரபதியில் நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினவிழாவை முன்னிட்டு கடலில் பதமிடும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை வணங்கினர் .
அய்யா வைகுண்டரின் அவதார தின விழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் 188-வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் அய்யா வைகுண்டருக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் சிறப்பாக நடைபெற்றன.
சூரிய உதயத்தின் போது பள்ளியறையில் உள்ள பணிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெறுவது இதன் சிறப்பு. இங்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற பக்தர்கள் “அய்யா சிவ சிவ” என்ற கோஷத்துடன் வழிபட்டது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இதனை தொடர்ந்து கோவில் நடைதிறக்கப்பட்டு அவதார விழா பணிவிடை, உகம்பெருக்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.