நூதன முறையில் ஹோட்டலில் இருந்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று ஊழியர் ஒருவர் ஹோட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்டர் குறித்து கடையின் உரிமையாளரிடம் பேச வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் ஊழியர் கடையின் உரிமையாளரை அழைத்து வர சென்றுள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 25000 பணத்தை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து நூதன முறையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.