இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து அரையிறுதிக்கு சென்றுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று குரூப் 1 பிரிவின் கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் சிட்னி மைதானத்தில் மோதியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 4 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லும். அதே சமயம் தோல்வியடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி.
எனவே ஆஸ்திரேலியா ரசிகர்கள் இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் இருவரும் களமிறங்கினர்.. இருவரும் நன்கு தொடங்கிய நிலையில் குசால் மெண்டிஸ் 18 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வந்த தனஞ்செயா டி சில்வா 9, அசலங்கா 8 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டனர். 10.4 ஓவரில் இலங்கை 84/3 என இருந்தது.
இதையடுத்து நிசாங்காவும் ராஜபக்சேவும் ஜோடி சேர்ந்தனர். நிசாங்கா சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அதன் பின் 45 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 67 ரன்கள் எடுத்திருந்த நிசாங்கா 16 வது ஓவரில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து 18ஆவது ஓவரில் தசுன் ஷானகா 3 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து மார்க் வுட் கடைசி ஓவரில் ராஜபக்சே (22) ரன் அவுட் ஆனார். மேலும் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே கொடுத்து ஹசரங்கா 9, கருணாரத்னே ஆகியோரை அவுட் செய்தார் வுட். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் மார்க் வுட் 3 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 1, பென் ஸ்டோக்ஸ் 1,சாம் கரன் , அடில் ரஷீத் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தணியின் துவக்க வீரர்களாக ஜாஸ் பாட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் சிக்ஸர், பவுண்டரி என அடித்து ஹேல்ஸ் மிரட்டினார். இதையடுத்து ஜாஸ் பட்லர் 28 ரன்னில் 8ஆவது ஓவரில் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 75 ரன்கள் குவித்த பிறகு தான் முதல் விக்கெட்டை இழந்தது. அதனைத் தொடர்ந்து அலெக்ஸ் 10ஆவது ஓவரில் 30 பந்துகளில் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதையடுத்து சீக்கிரமே வீழ்த்திவிடலாம் என்று நினைத்த இங்கிலாந்து பேட்டர்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சவால் விடும் வகையில் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து மிரட்டினர். அதாவது பென் ஸ்டோக்ஸ் ஒரு முனையில் ஆடிக் கொண்டிருக்க இங்கிலாந்து வீரர்களான ஹாரி புரூக் 4, லிவிங்ஸ்டோன் 4, மொயின் அலி 1 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டனர். 14.3 ஓவரில் இங்கிலாந்து அணி 111/5 என இருந்தது.
இதையடுத்து சாம் கரன் – பென் ஸ்டோக்ஸ் இருவரும் ஆடிவந்த நிலையில், ஓவருக்கு 5 ரன்கள் வீதமே தேவைப்பட்டது அப்போது 17வது ஓவரை வீசிய லஹிரு குமாரா 2 ரன்கள் மட்டுமே கொடுத்து சாம்கரன் (6) விக்கெட்டை எடுத்தார் கடைசி இரண்டு ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 12 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. பின் உள்ளே வந்தார் வோக்ஸ்.அப்போது போது ரஜிதா வீசிய 19 வது ஓவரில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட லஹிரு குமாரா வீசிய முதல் பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுக்க அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து வோக்ஸிடம் ஸ்ட்ரைக் கொடுக்க 3ஆவது பந்து டாட் ஆனது. கடைசி 3 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட, வோக்ஸ் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 36 பந்துகளில் 42 ரன்களுடனும், கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இலங்கை அணியில் லஹிரு குமாரா ஹசரங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதியை விட்டு வெளியேறியது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளும் 7 புள்ளியில் இருந்தாலும் ரன் ரேட்டில் இங்கிலாந்து அதிகம் உள்ளதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா வெளியேறுகிறது.. இலங்கையை நம்பிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.. இதனால் ஆஸ்திரேலிய அணி மற்றும் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
A thriller in Sydney and England hold their nerve to book a spot in the semi-finals! 🤯#T20WorldCup | #SLvENG | 📝: https://t.co/goECJqYlQs pic.twitter.com/qwTrgQL06i
— ICC (@ICC) November 5, 2022
England book their place in the #T20WorldCup semi-finals 🤩
🏴 are #InItToWinIt@royalstaglil | #T20WorldCup pic.twitter.com/ZRInRcZuPR
— ICC (@ICC) November 5, 2022