சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோயாளிகள் தங்களை மழையில் இருந்து காத்துக் கொள்ள முடியும். மேலும் புற நோயாளிகள் பிரிவு பகுதியில் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகின்றது.
அது மட்டுமல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீர் தேங்க கூடிய இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு நீர் தேங்கினால் வடிவதற்கு உண்டான மோட்டார்கள் பொருத்த தயார் நிலையில் உள்ளது. மேலும் நோய் காலத்திற்கான மருந்துகள் கம்பளிகள் இருக்கின்றன. அத்துடன் பேரிடர் காலத்தை மனதில் கொண்டு ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் கொண்ட அறையை தரைத்தளத்தில் தயாராக வைத்துள்ளோம். மேலும் ஜெனரேட்டர்கள், குடிநீர் வசதிகள் உள்ளிடவைகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.