அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஐம்பதுக்கும் மேல் சராசரி வைத்துள்ளவர். எத்தகைய பந்துவீச்சாளர்களையும் எதிர்கொண்டு ரன் குவிக்கும் திறமை கொண்டவர். அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சீரான நாடு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் என கிரிக்கெட் விமர்சகளால் புகழப்படுபவர் விராட் கோலி. ஆனால் நியூசிலாந்து பயணம் அவரது கிரிக்கெட் வாழ்வில் மிக மோசமான பகுதியாக கருதப்படுகிறது. இந்த தொடரில் 20 ஓவர் போட்டி , நாள் போட்டி டெஸ்ட் போட்டி என அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 218 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி.
ஒருநாள் தொடரில் ஒரே ஒரு அரைசதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது 5 டெஸ்ட் கொண்ட தொடரில் கோலியின் செயல்பாடு மிக மோசமாக இருந்ததாக விமர்சனத்துக்கு உள்ளானது. அதேபோல் தற்போதைய நியூசிலாந்து பயணம் அவருக்கு மிகவும் மோசமாக அமைந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் கடந்த 22 இன்னிங்ஸ்சில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இதனால் அவர் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளார். பேட்ஸ்மேனாக மட்டுமல்ல அணியை வழிநடத்திவதியும் நியூஸிலாந்து தொடரில் அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படாதது, அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பராக ஷாகா இருக்கையில் தொடர்ந்து மோசமாக விளையாடும் ரிஷப் பந்த் டெஸ்ட் அணியில் வாய்ப்பளித்தது போன்றவை கடும் விமர்சனத்துக்குள்ளாகின.
இது மட்டுமின்றி ஒவ்வொரு முறையும் விராட் கோலி டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவதும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் இல்லாத நிலையில் அணியின் நிலை உணர்ந்து ஆடவேண்டிய கோலி அதனை செய்யவில்லை என விமர்சிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் நியூசிலாந்து பயணத்தின்போது அவர் தடுமாற்றத்தில் இருந்ததாகவே கூறுகின்றனர். விரைவில் தனது ஆட்டத்தை திறனை மீட்டெடுப்பதோடு , அணியை வழி நடத்துவதிலும் பக்குவமான அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.