உதயநிதி ஸ்டாலின் இப்போது மாமன்னன், கலக தலைவன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் கமல்ஹாசன் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இது தொடர்பாக உதயநிதி கூறியதாவது ”அரசியல், சினிமா ஆகிய இரண்டிலும் ஒரே சமயத்தில் ஈடுபடுவது சிரமமாக இருக்கிறது. அரசியலை சினிமா போன்று பாவிக்க இயலாது. ஏனெனில் அதில் முழு நேரமும் கவனம்செலுத்த வேண்டும். ஆகவே சினிமாவில் நடிப்பதை குறைக்க நினைத்தேன். அதன்படி நெஞ்சுக்கு நீதியுடன் முடித்துக்கொள்ள முடிவுசெய்தேன்.
அதன்பின் மாரி செல்வராஜ் வந்து மாமன்னன் கதை கூறியதும் பிடித்து போய் அதுவே கடைசி படம் என நினைத்தேன். அதனை தொடர்ந்து மகிழ் திருமேனி கூறிய கலக தலைவன் கதை பிடித்ததால் அதில் நடிக்க முடிவுசெய்தேன். இந்நிலையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறேன். கமல்ஹாசன் ஒரு வரிக்கதை கூறியதும் அது பிடித்திருந்தது. நான் அப்படத்தை தயாரிக்கிறேன் என்றேன்.
எனினும் கமல்ஹாசன் அதனை ஏற்காமல் என்னையே நடிக்க கூறினார். அத்துடன் அவரே இயக்குனரை முடிவுசெய்வார். தற்போது பட வேலைகள் நடைபெறுகிறது. இதனிடையில் கலக தலைவன் அரசியல் படமில்லை. கலகத்துக்கு போர், கிளர்ச்சி எனவும் அர்த்தம் இருக்கிறது. மாமன்னன் படத்தில் வடிவேலுவை வேறுமாதிரி பார்க்கலாம். அப்படத்துக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும்” என்று கூறினார்.