தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் காலை 5:30 மணிக்கு குரூப் 2 பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. இதையடுத்து எப்படியும் வென்றுவிடலாம் என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது.
இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் அரை இறுதி வாய்ப்பும் தென்னாபிரிக்கா அணிக்கு பறிபோனது. அந்த அணி பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணி அரையிறுதிக்கு உறுதியாக சென்று விட்டது.
இந்திய அணி மதியம் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி ஆகிவிட்டது. வெற்றி பெற்றால் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் இதற்கிடையே நடந்து வரும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி அரையிறுதிக்கு செல்லும்.
தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தால், பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி ஜிம்பாப்வே அணியிடம் தோற்றால் இந்திய அணி வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும்.. ஆனால் தற்போது இந்தியா தோற்றாலும் அரையிறுதிக்கு செல்லும்.. முதலிடத்தை தக்க வைக்க இந்தியா வெற்றிபெற வேண்டும்.குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.