சேலம் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பூபதி என்பவரும் அதே பகுதியே சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களைச் சென்ற 1-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன் குமார் தப்பித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்பின் திருவண்ணாமலை பகுதியில் ரவுடி பூபதியை இறக்கி விட்டு சென்றுள்ளார்கள். அங்கு சென்று பூபதியை தனிப்படை போலீசார் மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தார்கள்.
கூலிப்படையை ஏவி ரவுடி கடத்தலில் ஈடுபட்டதாக பிரபல நகை கடை உரிமையாளர் ஏகாம்பரம் மற்றும் அவரின் கடை மேலாளர் பாபு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தார்கள். இதனிடையே 10 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்து தருவதாக கூறி ஏமாற்றியதாக பூபதி மீது நகை கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பூபதியை கைது செய்தார்கள். இந்நிலையில் கூலிப்படையைச் சேர்ந்த பிரபாகரன், யுவராஜ், கௌதம், மணிமாறன், நவீன் குமார் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தார்கள்.
தலைமறைவாக இருக்கும் பிரகாஷ், விஜி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் ரவுடி பூபதி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் இதனால் அவருக்கு பல நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அவரிடம் இருந்து இரண்டு கார்கள், 4 சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்கள்.
மேலும் பூபதியிடம் பணப்புழக்கம் அதிக அளவில் இருந்ததால் பல பெண்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தியதாகவும் இவரின் முதல் மனைவி காயத்திரி விவாகரத்து வாங்கிக் கொண்டு பிரிந்து சென்று விட்டதாகவும் இதன் பிறகு இவர் இரண்டு பெண்களுடன் குடும்ப நடத்தி வந்ததாகவும் பின்னர் மருத்துவ மாணவி ஒருவருடன் பழகி அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
இவர்கள் மூன்று பேரும் பிரிந்து சென்று விட்டதாகவும் தற்போது பெண் கிராம நிர்வாக அலுவலர் ஒருவரை திருமணம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இவர் மீது மத்திய குற்ற பிரிவு அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பிச் சென்ற வழக்கு, மோசடி வழக்கு, பெண்ணை தாக்கிய வழக்கு என 7 வழக்குகள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளார்கள்.