பீகாரில் ஒரு கிராமத்தில் மாநில முதல்வா் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்பு சம்பவத்தை அடுத்து கடந்த 15 வருடங்களாக அங்கு சாலைவசதி ஏற்படுத்தி தரவில்லை என பிரசாந்த் கிஷோா் குற்றம் சாட்டியுள்ளாா். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோா் “ஜன் சுராஜ்” எனும் 3,500 கி.மீ தொலைவு நடைப் பயணத்தை பீகாா் மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறாா். மேற்கு சம்பாரன் மாவட்டத்திலுள்ள ஜோகபட்டி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் பேசியிருப்பதாவது
“இந்த கிராமத்தில் இருந்து பெடியா நகரம் 32 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. தூசு பறக்கும் சாலையின் வழியே பயணிக்கும் மக்கள், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுமோ எனும் அச்சத்தில் இருக்கின்றனர். இந்த கிராமத்தில் 15 வருடங்களுக்கு முன்பு முதல்வா் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தின் காரணமாக, இன்னும் சாலைவசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. அச்சம்பவத்துடன் தொடா்புடைய குற்றவாளி கண்டறியப்படாத நிலையில், ஒட்டுமொத்த கிராமமும் தண்டிக்கப்பட்டு உள்ளது” என்று அவர் பேசினார்.