சேலம் மாவட்டத்தில் ஓமலூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளியில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் கேண்டினும் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வகுப்பு இடைவெளியின் போது 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கேண்டில் இருந்து முட்டை பப்ஸ் மட்டும் வேஜ் பப்ஸ் வாங்கி சாப்பிட்டு உள்ளனர்.
இதனை மொத்தம் 30 மாணவர்கள் சாப்பிட்டதாக தெரிய வருகிறது. சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக 29 மாணவர்களும் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் ஆசிரியர்களும் கேண்டின் ஊழியர்களும் உடனடியாக பள்ளி வாகனங்கள் மூலம் மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியிலும் மாணவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனையிலும் குவிந்தனர்.
மேலும் ஓமலூர் தாசில்தார் மற்றும் போலீசார் மாணவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். மேலும் அவர்கள் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். அதோடு உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவி அரவிந்த் பப்ஸ் வாங்கப்பட்டதாக கூறப்பட்ட பேக்கரியில் ஆய்வு நடத்தியுள்ளார். இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் கேண்டின் தேவை இல்லை என பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கேண்டினை மூடும்படி தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.