ஹிமாச்சலபிரதேச மாநிலத்தில் இப்போது பா.ஜ.க-வின் ஆட்சி நடந்து வருகிறது. தற்போது ஆட்சிக் காலம் முடிந்து, இம்மாதம் 12ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இப்போது அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இருக்கின்றனர். காங்கிரஸ் சென்ற வெள்ளிக்கிழமையன்று தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டிருந்த சூழ்நிலையில், இன்று பா.ஜ.க தங்களது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வின் ஆட்சியில் நடந்திருக்கும் பலவற்றையும் குற்றச்சாட்டுகளாக மக்கள் முன் வைத்துள்ளனர். இதை நிவர்த்தி செய்யும் அடிப்படையில் தங்களது வாக்குறுதிகளை அளித்திருந்தனர். பா.ஜ.க-வின் வாக்குறுதியில், மாநிலத்தில் புதியதாக 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாகவும், 6 -12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவசமாக மிதிவண்டி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களின் சம்பளம் வழங்கும் முறைகளை மாற்றியமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனைத் தவிர்த்து தற்போது விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய்.6000 பிரதம மந்திரி கிஷன் திட்டத்தின் வாயிலாக அளித்துவரும் தொகையை உயர்த்தி ஆண்டிற்கு கூடுதலாக ரூபாய்.3,000 மேலும் அளிக்கப்படும் எனவும் இந்த திட்டத்தில் 10 லட்சம் விவசாயிகள் கூடுதலாக இணைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.