தி.மு.க அரசு தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என கடலூர் மாவட்டத்தில் சென்ற மாதம் 27ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அவர் பேட்டியளித்தபோது, மரத்தின் மேல குரங்கு தாவுவது போன்று சுத்திச்சுத்தி வருவது ஏன்? என செய்தியாளர்களை அவமதிக்கும் வகையிலும், ஒருமையிலும் பேசினார். தி.மு.க மீது அண்ணாமலை தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர்கள் தரப்பிலிருந்து அண்ணாமலைக்கு பதில் சொல்வது அமைச்சர்களும், செய்தித்தொடர்பாளர்களும்தான். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பாதுகாப்பாக இருங்க!, மழையில் நனையாதீங்க என அண்ணாமலை அன்பாகப் பேசி இருக்கிறார்.
இவ்வாறு அண்ணாமலையின் பாணி மாறியிருப்பது பலரையும் வியப்படைய வைத்துள்ளது. அதாவது பரபரப்பு அரசியல்பாணி நீண்ட தினங்களுக்கு உதவாது என்பதையும், ஊடகங்களை அனுசரித்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் பா.ஜ.க மேலிடம் அறிவுறுத்தியதே அண்ணாமலையின் இம்மாற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இவற்றில் அதிமுகவே அண்ணாமலைக்குப் பாடமாகவும் ஆகியுள்ளது. அதிமுக மூத்ததலைவர்கள் தி.மு.க மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் எப்போதும் அரசியல் நாகரிகத்திற்குட்பட்டே இருக்கும். கட்சியின் மாநிலத் தலைவராக இருந்துகொண்டு எளிதில் உணர்ச்சி வசப்படுவது அவரது தேர்வையே கேள்விக்குறியாக்கும் என்பதால், அண்ணாமலையும் தன் நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.