பன்முக தன்மைகளை கொண்ட கமல் குறித்து ஓர் பார்வை.
தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக வலம் வருகின்றார் கமல்ஹாசன். இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் 1954 ஆம் வருடம் நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை பரமக்குடியிலேயே படித்தார். இதன் பின் திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். இதையடுத்து எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பயின்றார்.
இதன்பிறகு அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இதற்கு காரணம் அவர் சிறுவயதில் இருந்தே படிப்பை விட கலையின் மீதுதான் அதீத ஆர்வத்தை கொண்டிருந்தார். இதனால் அவர் டி.கே.எஸ் என்ற நடன குழுவில் சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி பின்னர் திரைத்துறையில் நடன அமைப்பாளராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து பணியாற்றினார். இதனிடையே அவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
இவர் தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டுள்ளார். அதாவது நடிகராக மட்டுமல்லாமல் நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார்.
இவர் 1960 ஆம் வருடம் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தனது ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஜனாதிபதியின் கையால் தங்கப் பதக்கத்தை பெற்றார். இதன்பிறகு மலையாளத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பிறகு தசவதாரத்தில் உலகநாயகன் என்ற பெயரை பெற்று இன்று வரையிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கம், இந்தி என ஆறு மொழிகளில் 228 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார். இவர் இது வரை தேசிய விருதுகள் நான்கும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பத்தும் பிலிம் ஃபேர் விருதுகள் 19 மற்ற விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள், செவாலியே உள்ளிட்ட பல விருதுகளை பெற்று தனக்கென நீங்கா இடத்தை பிடித்திருக்கின்றார்.
இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் நான் ஏன் பிறந்தேன், சவாலே சமாளி, அன்பு தங்கை உள்ளிட்ட திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இயக்குனராக இவர் ஹேராம், சாச்சி 420, விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் மகாநதி, விக்ரம், ஆளவந்தான், ஈநாடு, உன்னை போல ஒருவன், தூங்காவனம் என பத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் சொந்தமாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். சிகப்பு ரோஜாக்கள் தொடங்கி எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2017 ஆம் வருடம் ஆரம்பித்து தற்போது வரை சீசன் சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் தனக்கென தனி இடத்தை பிடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.