தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த 2 படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் தலைவர் 171-வது படத்தை டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மற்றொரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். லால் சலாம் என்ற பெயரிடப்பட்ட அப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகர் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் இரண்டு படங்களிலும் அனிருத் இசையமைப்பதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் அவருடைய சம்பளத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் தற்போது ஏஆர் ரகுமானை இசையமைப்பாளராக புக் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அனிருத்தின் சம்பளம் அதிகமாக இருந்ததால் தான் லைகா நிறுவனம் ஏ.ஆர் ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.