ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள்.
இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் நம்பகத்தன்மை இழக்கப்படுகிறது. அதே சமயத்தில் ட்விட்டர் நிறுவனமானது, போலி கணக்குகளை கண்டறிந்து நீக்குவதற்கு பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கண்டுபிடிக்கப்படும் போலி கணக்குகளுக்கு முதலில் எச்சரிக்கை அனுப்பப்படும்.
அதன் பிறகும் அந்த கணக்குகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தால், அது நீக்கப்படும். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க், போலி கணக்குகள் கண்டறியப்பட்டால் எந்த எச்சரிக்கையுமின்றி, அது முற்றிலுமாக நிரந்தரமாக தடை செய்யப்பட்டு விடும் என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது, போலி கணக்குகள் என்று குறிப்பிடப்படாமல் இருக்கும் கணக்குகள் எச்சரிக்கை இல்லாமல் மொத்தமாக நீக்கப்பட்டு விடும். இதற்கு முன்பாக, கணக்கை நீக்குவதற்கு முன் எச்சரித்தோம். ஆனால், இப்போது நாங்கள் எச்சரிக்கை கொடுக்க மாட்டோம். இது ட்விட்டருக்குரிய “ட்விட்டர் ப்ளூ” வசதியை பெறுவதற்குரிய தெளிவான நிபந்தனை என்று குறிப்பிட்டிருக்கிறார்.