இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சலப்பிரதேச அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதிகள் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்? பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன்மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார். இதனையடுத்து ரஷ்யா நடத்தியவரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கி தவித்த போது இருநாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற 2 நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனால் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலம் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.