உலக அளவில் செயற்கை உறுப்பு பொருத்தல் மற்றும் மாற்றுத் திறனர் உதவிக் கருவி தினமானது நேற்று தான் கொண்டாடப்பட்டது. அதன்படி இந்த தினம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை முன்னிட்டு செயற்கை அவைய துணை நிலையத்தில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை கை, கால்களை உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியினை முதல்வர் பாலாஜி நாதன் முதலில் இயக்கிய வைத்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 185 நவீன செயற்கை கை, கால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் படி நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதில் 85 உறுப்புகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள்ள செயற்கை அவைய துணை நிலையத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இந்த உறுப்புகள் வெளியில் 80 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை விற்கப்படுகின்றது. ஆனால் நமது மருத்துவமனையில் இலவசமாக முதலமைச்சருடைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பயனாளிகள் திருப்தி அடைந்து உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.