கோப்பையை வெல்ல பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்..
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றோடு சூப்பர் 12 போட்டிகள் அனைத்தும் முடிவடைந்தது. நேற்று காலை நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியதால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷாண்டோ 48 பந்தில் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் எடுத்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. மொத்தமாக 4 அணிகள் அரையிறுதிக்கு சென்றுள்ளது.
அதன்படி குரூப்-1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணியில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இதில் நவம்பர் 9ஆம் தேதி நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 10ஆம் தேதி 2ஆவது அரையியிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கேப்டன் பாபர் அசாமுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பாபர் அசாமை டேக் செய்து, ஃபயர் பவர் (அதிரடி) கொண்ட ஹரிஸ் மற்றும் ஷாதாப் போன்ற பேட்டர்கள் தொடக்கத்தில் இறக்கி விட வேண்டும். ரிஸ்ஸுடன் ஹரிஸ் ஓபனிங் செய்ய வேண்டும். பின் நீங்கள் (பாபர்) அல்லது அடுத்த சிறந்த ஹிட்டரை இறக்க வேண்டும். பேட்டிங் வரிசையில் எந்த நேரத்திலும் நீங்கள் இறங்க தயாராக இருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவதில் நீங்கள் உறுதியாகவும் சமநிலையான பேட்டிங் வரிசையில் நெகிழ்வாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
@babarazam258 we need fire power at the top with batters who are showing clear intent like Haris and Shahdab. Plz consider Haris opening with Riz and you one down followed by ur next best hitter. You should be rigid on winning the match and flexible on a balanced batting line up
— Shahid Afridi (@SAfridiOfficial) November 6, 2022