தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழையால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கின்ற நிலையில் தேசிய பேரிடர் மீட்பு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 37 மாவட்டங்களில் 4.84 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது.
இதில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 22.92 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 26 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பகுதிகளில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் பல இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை 1,149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 899 பேரும் தயார் நிலையில் இருக்கின்றனர் எனவும் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 593 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.