அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் நிலையில், தொடரில் நாங்கள் சற்று பின்தங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன் என்று மொயின் அலி கூறியுள்ளார்..
இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 12 போட்டியில்வெற்றிபெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை போட்டியில் இருந்து வெளியேற்றி, இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. ஜோஸ் பட்லரின் இங்கிலாந்து அணி, இந்தப் போட்டியில் மிகவும் கஷ்டப்பட்டு தான் இலங்கையை வீழ்த்தியது. இலங்கை கூடுதலாக 20 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம். எது எப்படியோ இங்கிலாந்து தற்போது அரையிறுதிக்கு வந்துள்ளது. குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் ஜிம்பாப்வேக்கு எதிரான அபார வெற்றியுடன் மோத வரும் இந்தியா கடும் நெருக்கடியை இங்கிலாந்துக்கு கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.. அதேபோல இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் நவம்பர் 10ஆம் தேதி ஒரு சரியான போட்டி காத்திருக்கிறது. இதற்கிடையே இங்கிலாந்து வீரர் மலான் காயமடைந்துள்ளதால் அரையிறுதியில் ஆடுவதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான போட்டியின் போது மலான் இடுப்புப் பகுதியில் காயமடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி மோதலில் இடம்பெற வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான மொயீன் அலி தெரிவித்துள்ளார். மலன் களமிறங்காவிட்டால், அணியில் உள்ள மாற்று பேட்டரான பில் சால்ட் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் மொயின் அலி இதுகுறித்து கூறியதாவது, மலான் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாட வாய்ப்பில்லை. “அவர் பல ஆண்டுகளாக எங்கள் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார். எனக்குத் தெரியாது, ஆனால் உங்களிடம் நேர்மையாகச் சொன்னால் அது பெரிதாகத் தெரியவில்லை. அவர் நேற்று (6ஆம் தேதி) ஸ்கேன் செய்யச் சென்றார், நாங்கள் இப்போதுதான் வந்தோம், எங்களுக்கு நிறைய தெரியாது, ஆனால் நன்றாக இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை என்றார்..
மேலும் “இங்கிலாந்து பின்தங்கிய நிலையில் உள்ளது, ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது என்று நான் நினைக்கிறேன். இந்த போட்டியை நீங்கள் பார்த்தால் கூட, பொதுவாக அவர்கள் நன்றாக விளையாடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் கொஞ்சம் பின்தங்கியுள்ளோம், ஆனால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்று மொயின் அலி மேலும் கூறினார்.
முதல் அரையிறுதி போட்டியில் நாளை நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2ஆவது அரையிறுதியில் நவம்பர் 10ஆம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.