பொருளாதார ரீதியாக பின்தங்கி முன்னேறிய வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது இல்லை என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீட்டு ஆதரவு தெரிவித்து இன்று தீர்ப்பு வழங்கி இருக்கின்றனர். இத்தீர்ப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் “பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்காக கடந்த 2019ம் வருடம் ஒன்றிய பா.ஐ.க அரசு கொண்டுவந்த இடஒதுக்கீட்டு முறை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமையும் என்ற அடிப்படையில் இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தை தி.மு.க முன்னெடுத்து நடத்திவந்தது.
இவ்வழக்கில் இன்று வெளியாகி இருக்கும் தீர்ப்பு சமூக நீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டுகால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றே கருத வேண்டி இருக்கிறது. இருப்பினும் தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய வகுப்பினருக்கான இந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிரான நம் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படும். சமூக நீதியைக் காக்க முதல் அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வைத்த தமிழக மண்ணில் இருந்து, சமூக நீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.