நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கை காரணத்தினால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி அமைப்பானது நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இருப்பினும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், இணைக்கப்பட்டுள்ள ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். கடந்த ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ஆர்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்துள்ளனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாட்டில் புளோரிடா என்ற மாகாணத்தில் சக்தி வாய்ந்த “ஐயான்” என்ற சூறாவளி தாக்கவுள்ளது என தகவல் வெளியானது. இது இந்த ராக்கெட் செலுத்த கூடிய பகுதியை கடந்து செல்ல கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், ராக்கெட் ஏவுதளத்திலிருந்து அதனை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் சூறாவளி புயல், எரிபொருள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 3 முறை இந்த பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலும் மற்றும் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையிலும் என இரண்டு காலகட்டங்களில் ஒன்றை நாசா தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதம் கடந்து நவம்பர் மாதம் வந்துள்ள சூழ்நிலையில் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை செலுத்துவது என நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் அன்று அதிகாலை 12.07 மணியளவில் ராக்கெட்டை செலுத்தவும், அதனை லைவ் நிகழ்ச்சியாக நாசா வலைதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ராக்கெட்டை செலுத்தும் ஏவுதளத்துக்கு ராக்கெட்டை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே சூறாவளி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இம்முறை நிக்கோல் என்ற சூறாவளியானது, புளோரிடாவின் கிழக்கு கடலோர பகுதியை நோக்கி பயணிக்கின்றது. கென்னடி விண்வெளி மையம் அருகே இன்று கடந்து செல்ல கூடிய இந்த பருவகால புயலால் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சத்தில் நிலவு ஆய்வு விண்கலத்தின் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ கூறியதாவது, “நவம்பர் 14-ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த முறை நவம்பர் மாதம் 16-ஆம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நமது திட்டத்தில் நம்முடைய மக்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இந்த விண்கல பயண தேதியை சற்று தள்ளி வைத்திருப்பது, பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவர்கள் தங்களது குடும்பத்தினரின் தேவைகளுக்கு உதவியாக இருப்பதற்கும் அனுமதி அளித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 3 முறை ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ள சூழலில், மீண்டும் ராக்கெட்டின் பயண தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.