Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்..!!

டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதியது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து துவக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் ஆலன் (4) ஷாஹின் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கிய நிலையில், அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார்.. இதையடுத்து கேன் வில்லியம்சன் – கான்வே இருவரும் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். அதன்பின் பவர் பிளே கடைசி ஓவரின் கடைசி பந்தில் துரதிஷ்டவசமாக கான்வே (21) ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 6 ரன்னில் அவுட் ஆனார். நியூசிலாந்து அணி 8 ஓவரில் 49/3 என இருந்தது.

இதையடுத்து கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட் இழக்காமல் பொறுப்புடன் ஆடினர்.. மிட்செல் சற்று அதிரடியாக ஆடினார். கடைசி கட்ட நேரத்தில் அடிக்க வேண்டிய போது அஃப்ரிடி  வீசிய 17வது ஓவரில் கேன் வில்லியம்சன் 46 (42)  போல்ட் ஆகி அவுட் ஆனார். இதையடுத்து வந்த நீசம் மிட்சலுடன் கைகோர்த்து ஆடினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 35 பந்துகளில் (3 பவுண்டரி, 1 சிக்ஸர்) 53 ரன்களுடனும், நீசம் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அஃப்ரிடி 2 விக்கெட்டுக்களை, முகமது நவாஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. கடைசியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் 15 – 20 ரன்கள் நியூசிலாந்து அணி குறைவாகவே எடுத்தது.

இதை எடுத்து 153 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் களமிறங்கினர். இதில் ட்ரென்ட் போல்ட் வீசிய முதல் பந்திலேயே ரிஸ்வான் பவுண்டரியுடன் தொடங்கினார். இருப்பினும் அதே போல்ட் ஓவரில் 4ஆவது பந்தில் பாபர் அசாம் கீப்பருக்கு ஒரு கேட்ச் கொடுத்தார். அதனை கீப்பர் கான்வே கோட்டை விட்டார்.. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட பாபர் மற்றும் ரிஸ்வான் இருவரும் பொறுப்புடனும், அதே நேரத்தில் சிறப்பாகவும் ஆடினர். ரிஸ்வான் ஒருபுறம் அதிரடியாக ஆட, பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி மீண்டும் ஃபார்முக்கு வந்தார் இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் 100 ரன்களை கடந்தது.

இருவரும் அதை அரை சதம் கடந்தனர். அதன் பின் போல்ட் வீசிய 13வது ஓவரில் பாபர் அசாம் (42 பந்துகளில் 53 ரன்கள்) மிட்செலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனைத்தொடர்ந்து முகம்மது ஹாரிஸ் மற்றும் முகமது ரிஸ்வான் கைகோர்த்தனர். கடைசி 5 ஓவரில் 31 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அதன்பின் ரிஸ்வான் போல்ட் வீசிய 17ஆவது ஓவரின் கடைசி பந்தில்  43 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த நிலையில் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின் ஷான் மசூத் உள்ளே வந்தார். கடைசி 18 பந்துகளில் 21 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டபோது, பெர்குசன் வீசிய அந்த ஓவரில் ஹாரிஸ் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடிக்க பாகிஸ்தானுக்கு 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12  பந்தில்  8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. சான்டனர் வீசிய அந்த 19ஆவது ஓவரில் 6 ரன்கள் கிடைத்த நிலையில், கடைசி பந்தில் ஹாரிஸ் 30 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.. சவுதி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்து வைடாக விச, பின் முதல் பந்தை மசூத் அடித்து ஒரு ரன் எடுத்து போட்டியை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிகள் நுழைந்துள்ளது.

Categories

Tech |