கேன் குடிநீர் ஆலைகளின் வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கேன் குடிநீர் நிறுவனத்துக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை கண்டித்த கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். கடந்த ஏழு நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று கேன் குடிநீர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் , சீல் வைக்கப்பட்ட கேன் குடிநீர் நிறுவனர் புதிதாக தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பத்தை 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் பரிசீலித்து அனுமதி வழங்குவது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என்றும் , வைப்பு தொகையாக 50,000 செலுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இந்த வழக்கை மார்ச் 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதையடுத்து ஆலோசனை மேற்கொண்ட கேன் குடிநீர் உரிமையாளர்கள் 7 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.