விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக தொடர்ந்து பட்டாசு வெடிப்பதை விரும்புகிறது, வெடிக்கவும் சொல்கிறது. 7 லட்சம் தொழிலாளர்களின் வீடுகளில் தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். வாகனம் ஓட்டுவதால் கூட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதை கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கடமை. பட்டாசு யாரும் வெடிக்க வேண்டாம் என்று சில விஷத்தன்மையான எண்ணங்களை கடந்த 2,3 ஆண்டுகளாக சிலர் கொண்டுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது.
அதுமட்டுமில்லாமல் பட்டாசு என்பது 2000 ஆண்டு நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு தீபாவளிக்கு ஒரு நாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவது என்பது ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் கூட்டணி குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக என்பது ஒரு பெரிய வலுவான கட்சி, அதில் யார் தலைவராக இருக்க வேண்டும் என முடிவெடுப்பது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை. அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் இருக்கணும், யாரை இணைக்கணும் என்று நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை. இப்படி இருங்கள் என்று கூறப்போவதுமில்லை. அது தொண்டர்களின் விருப்பம் ஆகும். மேலும் திமுக தொடர்ந்து 40 க்கு 40 வெற்றி பெறுவோம் என்ற கேள்விக்கு, 40க்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை. மக்களின் அதிருப்தி அதிகமாக உள்ளது. விலையேற்றம் உள்ளது. 20க்கு 20 என இல்லை, 15 க்கு 15 கூட வாய்ப்பு இல்லை. மக்களுக்கும் அதிருப்தி என்பதை ஆட்சி மீது அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.