நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை பிறப்பித்தது.
ஆனால் இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியின்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் 3வது டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதற்கிடையே குற்றவாளி பவன் குமார் குப்தா இருவரும் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்துள்ளதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை ஒரு நாளுக்கு முன்னர் நடந்த நிலையில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு பரிசீலனையில் இருப்பதால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. ஆதலால் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தணடனையை நிறுத்தி வைக்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசு நேற்று பரிந்துரைத்துள்ளது. முகேஷ், வினய், அக்சயின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இந்த நிலையில் கடைசி வாய்ப்பாக மீதம் இருக்கும் பவன் குப்தா தற்போது குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுவை அனுப்பியிருந்தார். இந்த நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன்குமார் குப்தாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களையும் நிராகரித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.