தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை விமானம் மூலம் புறப்பட்டு அவர்கள் வருகின்ற 13ஆம் தேதி சென்னை திரும்புவார்கள்.
இந்த பயணத்தின் போது ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி மாணவர்கள் பார்வையிட உள்ளனர். ஷார்ஜா கண்காட்சியில் இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்களில் மூன்று அரங்குகள் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறன் குறித்து கற்பிப்பதற்கு ஏதுவாக அழைத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து துபாயில் சிறப்பாக செயல்படு பள்ளிகள், ஆய்வுகளுக்கும், முக்கிய சுற்றுலா தளங்களுக்கும் சுற்றி பார்க்க மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.