இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் வடக்கு நகரமான யார்க்கில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோர் மீது முட்டை வீச முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இங்கு அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்கிற்குள் நுழைய இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அரசர் வருவதற்கு முன்பாக இருபுறமும் பொதுமக்கள் காத்திருந்த போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகின்றது. அரச குடும்பத்தினர் மீது பட்டதாக தெரியவில்லை. இதனை அடுத்து முட்டைகளை வீசிய நபரை காவல்துறை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது அந்த நபர் கூறியதாவது, “இந்த நாடானது அடிமைகளின் இரத்தத்தால் கட்டப்பட்டுள்ளது” என்று கூச்சலிட்டுள்ளதாக பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.