Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் சிங், வினய் ஷர்மா மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர். இதில் ராம்சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். மேலும் சிறுவன் 3 ஆண்டு சிறைத்தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டான்.

இந்த வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 1 ஆம் தேதி என இரண்டு முறை தூக்கு தண்டனை தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளிப்போனது. காரணம் குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி நீதிமன்றத்தில் சீராய்வு மனு, குடியரசு தலைவரிடம் கருணைமனு என சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தினர். இந்த மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்தர் ராணா மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உத்தரவிட்டார். குற்றவாளிகளுக்கு சீராய்வு மனு, மறு சீராய்வு மனு, கருணை மனு, மேல் முறையீட்டு மனு என நான்கு சட்ட வாய்ப்புகள் இருந்த நிலையில் அக்ஷய் குமார், முகேஷ், வினய்  ஆகியோர் வாய்ப்புகளையும் பயன்படுத்தி விட்டனர். பவன் குப்தாவுக்கு மட்டுமே வாய்ப்புகள் இருந்தது.

இதனிடையே நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தான். இந்த சீராய்வு மனுவையும் கடந்த 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  அதை தொடர்ந்து அவன் குடியரசு தலைவருக்கு கருணை மனு அளித்தான்.

குற்றவாளி பவன் குமார் குப்தா குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்துள்ளதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2 ஆம் தேதி நடந்த நிலையில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு பரிசீலனையில் இருப்பதால் தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற முடியாது. எனவே மறு உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் 3ஆவது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பவன்குப்தாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் இன்று நிராகரித்தார். ஏற்கனவே மூன்று பேரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில்  தற்போது பவன் குப்தாவின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் அதிரடியாக நிராகரித்துள்ளார். குற்றவாளிகள்  நால்வருக்கும் இருந்த சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் இனி தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றபடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கருணை மனு நிராகரிக்கப்பட்டது குற்றவாளி தரப்புக்கு தெரிந்து விட்டதா என மனு தாரருக்கு கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த மனுதாரர் ஆம், குற்றவாளி தரப்புக்கு தெரியும் என கூறினார். இதையடுத்து குற்றாவளிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு நாளை மனுவை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

 

Categories

Tech |