இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலிருந்து முட்டை லோடு ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கோபாலகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனராக துரைசாமி என்பவர் இருந்தார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் அதிகாலையில் சென்று கொண்டிருந்தபோது கோவை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியும், முட்டை லோடு ஏற்றி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் முட்டை லோடு ஏற்றி சென்ற லாரி சுக்குநூறாக நொறுங்கியது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபாலகிருஷ்ணன், துரைசாமி, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்து நித்திஷ், கிளீனர் தீபக் ஆகிய நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றும் மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததால் சாலையில் டீசல் டேங்க் உடைந்து சிந்தியதுடன், முட்டைகள் உடைந்து கிடந்ததால் தீயணைப்பு துறையினர் தண்ணீரை அடித்து சுத்தம் செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.