உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான்.
இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் மட்டுமின்றி, 23 எம்.பி.க்கள் உட்பட பல உயர் பதவிகளில் இருப்பவர்களையும் கொரோனா விட்டுவைக்காமல் பரவியிருக்கிறது. இதனால் ஈரானில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறக்கூடிய சிறப்பு பிரார்த்தனை ரத்து செய்யப்படுகிறது.
ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, இதுவரை 92 பேர் பலியானதோடு, 2, 922 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், 435 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,140ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் ஈரானில் 15 பேர், கொரோனாவால் பலியாகியிருப்பதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.