தேனீக்கள் கொட்டியதால் 30 ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அருகில் இருந்த மர சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
அப்போது மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து தொழிலாளர்களை விரட்டி கொட்டின. இதனால் மீனாட்சி, பழனியம்மாள், யசோதா, சின்னம்மாள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காயமடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.