இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது..
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்த 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 16 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் ஜோஸ் பட்லர் (80) அலெக்ஸ் ஹேல்ஸ் (86) அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தனர். இதையடுத்து இந்திய அணியின் தோல்வி குறித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். போராடி தோல்வி அடைந்தால் கூட பரவாயில்லை ஆனால் ஒரு விக்கெட் கூட இழக்காமல் மிகவும் மோசமாக தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கொட்டி தீர்த்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்திய அணி தோல்வி குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தோல்விக்குப் பிறகு, முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர்தோனியின் சாதனைகளை நினைவுகூர்ந்து, ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசும்போது, “யாராவது வந்து ரோஹித் சர்மா அடித்த இரட்டை (சதம்) 100 ரன்களையோ அல்லது அதற்கு மேலோ அடிக்கலாம், அதேபோல யாராவது வந்து விராட் கோலியை விட அதிக (சதம்) 100 ரன்களையும்அடிக்கலாம், ஆனால் இனி எந்த இந்திய கேப்டனாலும் மூன்று ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.. அதாவது தோனியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக புகழ்ந்துள்ளார் கம்பீர்..
பொதுவாக எப்போதும் தோனியை மறைமுகமாக தாக்கி விமர்சித்து பேசி வரும் கௌதம் கம்பீர் தற்போது தோனியை புகழ்ந்து பேசி இருப்பது தோனியின் ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கிறது.
இந்திய அணி இந்த தோல்வியைத் தொடர்ந்து, இந்தியா 2013 ஆம் ஆண்டு முதல் பெரிய ஐசிசி நிகழ்வுகளில் கோப்பையை வெல்லாமல் உள்ளது. அதன் பின்னர், இந்திய அணி 4 அரையிறுதி மற்றும் 2 இறுதிப் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியாவின் கடைசி ஐசிசி பட்டம் எம்எஸ் தோனியின் கீழ் வந்தது, அவர் தலைமையின் கீழ் இந்தியா 3 மெகா பட்டங்களையும் வென்றது. அதன்படி தோனியின் தலைமையின் கீழ் 2007-ல் டி20 உலகக்கோப்பை, 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013-ல் ஐசிசி சாம்பியன் டிராபியை இந்திய அணி வென்றுள்ளது.