போலந்து நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
இந்த நிலையில் மேற்கு போலந்தில் ஒரு நபர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சர் லுகாஸ் சுமோவ்ஸ்கி (Lukasz Szumowski) தெரிவித்துள்ளார். மேலும் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதுவரையில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக 2, 502 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 27 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர்.
அதேபோல் ஸ்பெய்னிலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.