உலகில் சிறு தானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சிறு தானியங்கள் உற்பத்தி 2020-21 விட 2021-2022 ஆண்டில் 27% அதிகரித்து உள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறுதானியங்கள் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. மொத்த சிறு தானியங்கள் உற்பத்தியில் ஒரு சதவீதம் ஏற்றுமதி ஆகிறது. தற்போதுள்ள 9 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற சிறுதானியங்களின் சந்தை அளவு 2025 வாக்கில் 12 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சத்துள்ள தானியங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் உயர்நிலை வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பான வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மூலம் வருகின்ற டிசம்பரில் இந்திய சிறுதானியங்கள் ஏற்றுமதி மேம்படுத்த விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது.
அதன்படி நூடுல்ஸ், பாஸ்தா, காலை சிற்றுண்டிக்கான தானியங்கள் கலவை, பிஸ்கட்கள், இனிப்பு வகைகள், கார வகைகள் போன்ற உண்பதற்கு தயாரான பரிமாற்ற தயாரான நிலையில் மதிப்பு கூட்டு பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்புக்கான புதிய தொழில்களையும் அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனையடுத்து இந்தியாவின் சிறுதானியங்கள் அமெரிக்கா, பிரிட்டன், யேமன், எகிப்து, துனிஷியா, ஓமன், சவுதி அரேபியா, லேபியா நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கம்பு, சோளம், கேழ்வரகு, கடலை உள்ளிட்ட சிறுதானியங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.