சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரக்கூடிய தொடர் மழையின் காரணமாக ரெட் அலர்ட் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்நாட்டு விமான முனையத்திலிருந்து அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானமும், காலை 6:15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானமும், அதே போல பகல் 1:10 மணிக்கு கர்னூல் செல்ல இருந்த விமானமும், மாலை 5:10 மணிக்கு மதுரை செல்ல இருந்த விமானம் ஆகிய 4 விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அதிகாலை மும்பையில் இருந்து வரவேண்டிய விமானம், 9:30 மணிக்கு மதுரையிலிருந்து வரவேண்டிய விமானம், மாலை 4:20 மணிக்கு கர்னூலிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானம் போன்ற விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர இலங்கை, பாரிஸ், சார்ஜா, துபாய், அந்தமான் போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன, மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமில்லாமல் ஒரு சில விமானங்கள் காலதாமதமாக செல்வதாகவும், இந்த அனைத்து மாற்றங்களும் பயணிகளுக்கு முன்கூட்டியே எஸ்எம்எஸ் மூலமாகவும், போன் மூலமாகவும் சொல்வதனால் சிரமங்கள் தவிர்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.