2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்ட் உட்பட 5 பேரை விடுவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான பணிகளில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் விடுவித்த வீரர்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் மும்பை அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த முக்கிய வீரர் கெய்ரன் பொல்லார்டை விடுவித்துள்ளனர். அதாவது பொல்லார்டு, பேபியன் ஆலன், டைமல் மில்ஸ், ஹிரித்திக் செளகின், மயங்க் மார்க்கண்டே ஆகியோரை விடுவித்துள்ளனர். ரோஹித் சர்மா, பும்ரா உட்பட 10 பேர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். பொல்லார்ட் கழட்டிவிடப்பட்டு இருப்பதால் மும்பை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் எந்த இக்கட்டான நேரத்திலும் போட்டியை மாற்றக்கூடிய திறமை பொல்லார்டுக்கு உண்டு. கடந்த சீசனில் சரியாக ஆடாததால் இந்த முடிவுக்கு வந்துள்ளது மும்பை அணி.
குறிப்பாக பொல்லார்ட் 2010 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் 11 போட்டிகளில் 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தனது ஐபிஎல் கேரியரில் இவருக்கு இது மிகவும் குறைந்தபட்ச சராசரி 14.40) ஆகும். மேலும் பந்துவீச்சிலும் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி கடந்த சீசனில் மிகவும் மோசமாக பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது.
அதேபோல சிஎஸ்கே அணியில் இருந்து கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர் ஆகியோரை விடுவித்துள்ளதாக தெரிகிறது. மேலும் ரவீந்திர ஜடேஜாவை சி.எஸ்.கே தக்கவைத்துள்ளது.