டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி .
2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச முடிவு செய்தார். இதை எடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக தொடங்கிய நிலையில், முகமது ரிஸ்வான் 15 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த முகமது ஹாரிஸ் 8 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதையடுத்து ஷான் மசூத் – பாபர் அசாம் இருவரும் ஜோடிசேர்ந்து பொறுப்புடன் ஆடிவந்த நிலையில், 12ஆவது ஓவரில் பாபர் அசாம் 32 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த இப்திகார் அகமது டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 85 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து சான் மசூத் மற்றும் சதாப்தான் இருவரும் பொறுப்புடன் ஆடி வந்த நிலையில், பாகிஸ்தான் அணி 15 ஓவரில் 106/4 என இருந்தது.
கடைசி 5 ஓவரில் அடிக்கலாம் என நினைத்த பாகிஸ்தான் வீரர்கள் வரிசையாக தங்களது விக்கெட்டுகளை விட்டனர். சான் மசூத் 38, சதாப்கான் 20, முகமது நவாஸ் 5, முகமது வாசிம் 4 என அடுத்தடுத்து அவுட் ஆக இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி 5 ஓவரில் பாகிஸ்தான் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் சூப்பராக பந்துவீசிய சாம் கரன் 4 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், அடில் ரசித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.