தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பாசன நிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும். இந்தாண்டு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டு தொகையை அரசே செலுத்த வேண்டும். தற்போது பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.