மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அந்தேரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 39 வயது நிரம்பிய தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயது நிரம்பிய மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். தொழிலதிபரின் மனைவி கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக பரேஷ் கோடா என்பவரை காதலித்த நிலையில், திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய கள்ளக்காதலை அவர் தொடர்ந்துள்ளார். இருவரும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் கணவருக்கு தெரிய வரவே தன்னுடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை கண்டித்துள்ளார்.
இருப்பினும் அவருடைய மனைவி கள்ளக்காதலனை தொடர்ந்து சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்காக 35 லட்சம் ரூபாயை அலமாரியில் தொழிலதிபர் வைத்துள்ளார். இது குறித்து அவருடைய மனைவியிடமும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 18-ஆம் தேதி வீட்டில் அலமாரியில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து தொழிலதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக மனைவியிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதோடு வீட்டில் இருந்த நகைகளையும் காணாததால் அவருடைய மனைவி மற்றும் கள்ளக்காதலனை சந்தித்து பேசி சுமுகமான முறையில் பணம் மற்றும் நகைகளை மீட்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளார். இருப்பினும் பலன் அளிக்காததால் தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது தன்னுடைய கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவருக்கு சூனியம் வைக்க வேண்டும் என்று அவருடைய மனைவி முடிவு செய்துள்ளார். இதனால் தனக்கு சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான படால் சர்மா என்ற ஜோசியருக்கு தன்னுடைய காதலன் பரேஷ் கோடா உதவியுடன் 59 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். இது விசாரணையில் தெரிய வந்ததால் பரேஷ் கோடா மற்றும் படால் சர்மா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடமும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.