தமிழகத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதலில் ஓரிரு நாட்களுக்கு லேசான மழை பெய்த நிலையில் பின் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது. கடந்த 10-ம் தேதி தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகியது. இந்த மழையின் காரணமாக சீர்காழி பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. இங்கு 122 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது கேரளா மற்றும் தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக மற்றும் கேரள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் நவம்பர் 16-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொருத்தவரை வான மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
இதனையடுத்து லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நவம்பர் 16-ஆம் தேதி மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் நவம்பர் 17-ஆம் தேதியும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.