தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை புறநகர் மற்றும் பெருநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதோடு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அந்த வகையில் கொளத்தூர் மற்றும் திருவிக நகர் பகுதிகளில் முதல்வர் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கியதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொசு வலையும் வழங்கினார். அதன் பிறகு ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீர் தங்கு தடை இன்றி தண்ணீர் செல்வதை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து ஸ்டீபன்சன் சாலையில் மேம்பால பணியின் காரணமாக தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படும் பணிகள், கொசஸ்தலை வடி நில பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள், டான் பாஸ்கோ பள்ளி அருகே உள்ள மழை நீர் வடிகால் பணிகள், பல்லவன் சாலை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி மழை நீரை வெளியேற்றும் பணிகள், வீனஸ் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேற்றும் உந்து நிலையத்தின் செயல்பாடுகள் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.
மேலும் இன்று புதுச்சேரி செல்லும் முதல்வர் சிதம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்வதோடு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் சொல்ல இருக்கிறார்.