தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் இவானா ஹீரோயின் ஆக நடிக்க, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான லவ் டுடே படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை குவித்து வருவதோடு, வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது.
இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரும் லவ் டுடே படத்தை சென்று பார்த்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் என்னுடைய அம்மா மற்றும் அப்பவுடன் சென்று லவ் டுடே படத்தை பார்த்தேன். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு என்னுடைய அம்மா துர்கா ஸ்டாலின் படத்தில் வருவது போன்று நாமும் செல்போனை மாற்றிக் கொள்ளலாமா என்று என்னுடைய தந்தை ஸ்டாலினிடம் கேட்டார். உடனே என்னுடைய தந்தையும் நானும் வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டோம் என்றார். மேலும் உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.