அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் எடப்பாடி ஈடுபட்டுள்ளதாகவும், சட்ட ரீதியான சிக்கல்களை எப்படி சந்திப்பது என்பது குறித்து தொடர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதோடு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக தான் வரும் என்று எடப்பாடி தரப்பு நம்புவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிய நிலையில், பாமக மற்றும் பாஜகவுடன் தான் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
ஆனால் தற்போது புதிய தகவலாக டிடிவி தினகருடன் கூட்டணி அமைத்து பாஜகவை சாந்தப் படுத்துவதற்கு எடப்பாடி முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் கசிந்துள்ளது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் ஜனவரி மாதத்தில் வரும் எம்ஜிஆரின் பிறந்த நாளின் போது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பொதுச் செயலாளராக மாறிவிட வேண்டும் எனவும் எடப்பாடி முடிவு செய்துள்ளாராம்.
தற்போது அதிமுக கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதால் அவருடைய கையே கட்சியில் ஓங்கியிருக்கிறது. மேலும் எடப்பாடியின் திட்டப்படி அனைத்தும் இரண்டு மாதங்களுக்குள் நடந்து முடிந்து விட்டால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததோடு தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுக திமுகவுக்கு எதிராக துணிச்சலாக புது எழுச்சியுடன் அரசியலில் ஈடுபடும் என்று அரசியல் பார்வையாளர்களும்,அதிமுகவின் தொண்டர்களும் கூறுகிறார்கள்.