கூகுள் நிறுவனம், சிறப்பு நாட்களில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை(கூகுள் டூடுல்) வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அத்துடன் ஒவ்வொரு வருடமும் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்துக்கான போட்டியையும் நடத்தி வருகிறது. 2022ம் வருடம் இந்தியாவில் கூகுள் சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் வெற்றியாளராக கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுவன் ஷ்லோக் முகர்ஜி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அத்துடன் இவரது சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் இன்று கூகுளில் இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் கூகுள் நடத்திய இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து 1 -10 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளிடமிருந்து 1,15,000 க்கும் மேற்பட்ட படைப்புகள் பெறப்பட்ட நிலையில், ஷ்லோக் உருவாக்கிய சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரம் வெற்றி பெற்றுள்ளது. வெற்றிப் பரிசாக கல்லூரி உதவித் தொகையாக ரூபாய். 5 லட்சமும், பள்ளியில் தொழில்நுட்ப உதவிக்காக ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 7 லட்சம் வழங்கப்படும் என கூகுள் அறிவித்து உள்ளது.